Tayyib
Search

Cart

More Details

1.  இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அறியும் முன்  மனித வாழ்க்கைக்கு இறை வழிகாட்டல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.

ஒழுங்கின்றி அமையாது மனித வாழ்க்கை!

ஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டியதில்லை, எவ்வளவு பெரிய ஆக்சிடென்டை நீங்கள் அந்த இரண்டு மணி நேரத்தில் செய்தாலும் உங்கள் மீது எந்த வழக்கும் போடப்படமாட்டாது என்ற அறிவிப்பு செய்யப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்...... என்ன நடக்கும்?

விளைவை நாம் அனைவரும் அறிவோம். பலரும் பயம் காரணமாக வாகனத்தையே வெளியில் எடுக்க மாட்டோம். ஏன்,  சாலையில்கூட  நடமாட மாட்டோம். எவ்வளவுதான் அவசர வேலை இருந்தாலும் அந்த இரண்டு மணி நேரம் முடியக் காத்திருந்து விட்டே புறப்படுவோம். ஆம்புலன்ஸ் உட்பட எதுவும் வீதியில் ஓடாது! அனைத்துமே ஸ்தம்பித்துவிடும்! இது எதை நமக்கு உணர்த்துகிறது?

1. ஆதிமுதலே இருந்தது ஒழுங்கு!

சட்டம், ஒழுங்கு, பரஸ்பர புரிதல் போன்றவை இல்லையென்றால் ஒரு சமூகம் மட்டுமல்ல ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து வாழ்வதும் அந்த வாழ்க்கை நீடிப்பதும் சாத்தியமில்லை என்பதைத்தானே அறிகிறோம். எனவே முதல் மனித ஜோடி இங்கு வாழத் துவங்கிய நாள்  முதலே அவர்களுக்கு ஒழுங்கும் வாழ்க்கை வழிகாட்டுதல்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியமும் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது திண்ணம். மாறாக சட்டம் ஒழுங்கு வரையறைகள் என்பவை செயல்களின் விளைவுகளைக் கண்டு பாடம் படித்தல் (trial and error) மூலம் உருவானவை அல்ல என நாம் புரிந்து கொள்ளலாம். ஆக ஆதி முதலே மனிதர்களைப் படைத்தவன் அவர்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்ததனால்தான் உலகம் உயிர்வாழ்கிறது!

2. படைத்தவனே பயன்பாடு அறிவான்

இன்று உலகில் நாம் காணும் அல்லது புழங்கி வரும் இயந்திரங்களோடு ஒப்பிட்டால் மனித உடலே அனைத்திலும் அதி நவீனமான தொழில் நுட்பமும் சிக்கல்களும் கொண்ட இயந்திரம்  என்பதை மறுக்க மாட்டோம். ஏனைய இயந்திரங்களுக்கு இல்லாத அறிவாற்றலும், உணர்ச்சிகளும் மனிதனுக்கு உள்ளன. அந்த இயந்திரங்களின் விடயத்தில் அவற்றின் தயாரிப்பாளர் கூறுவதை அப்படியே பின்பற்றுவது இன்றியமையாதது என்பதை அறிவோம். உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் அல்லது காரின்  டயருக்கு காற்றடிக்கும் போது, அந்த வாகனத்தை தயாரித்தவர் எவ்வளவு காற்றழுத்தம் இருக்க வேண்டும்  என்று சொல்கிறாரோ அந்த அளவிற்குத்தான் நாம் காற்றடிப்போம். மாறாக, நம் வாகனம் என்பதற்காக, நம் இஷ்டம் போல காற்றடிப்பதில்லை. இப்படி ஒரு சாதாரணமான விடயத்திற்கே வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது என்றால், எண்ணற்ற சிக்கல்களும் நுட்பமும் நிறைந்த மனிதன் என்ற இந்த  இயந்திரத்திற்கு அதை உண்டாக்கியவனின்  வழிகாட்டல் தேவையில்லை என்று எண்ணுவது பகுத்தறிவாகுமா? நாம் சொந்தம் கொண்டாடும் ஒரு பொருளையே நம் விருப்பப்படி உபயோகிப்பது சரியல்ல எனும்போது நமக்கு இரவலாகத் தரப்பட்ட பொருளை அவ்வாறு பயன்படுத்த முடியுமா? சிந்தியுங்கள். (தொடர நூலுக்குள் நுழையுங்கள்)