More Details

நாட்டுமக்களை நேசிப்பதும் இறைவழிபாடே: 

மேலும்நாட்டுமக்களை நேசிப்பதை வழிபாடாகக் கற்பிக்கிறது இஸ்லாம்.
“மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்” என்பதும் “மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்” என்பதும் நபிமொழிகள்.

இஸ்லாம் முன்வைக்கும் மறுமை நம்பிக்கை – அதாவது இறைவனின் கட்டளைகளை பூமியில் நடப்பாக்க செய்யப்படும் எந்த ஒரு செயலும் வீண்போவதில்லை. அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் அதாவது சொர்க்க வாழ்வில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கை – இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு அலாதியான துணிச்சலையும் வீரத்தையும் தருகிறது. நாட்டு மக்களை அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும் உடமைகளையும் அர்பணிக்க மாபெரும் உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது. வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி உயிர்துறந்த திப்புசுல்தான், குஞ்சாலி மரைக்காயர் போன்ற தியாகிகளை இதற்கு சில உதாரணங்களாகக் கூறலாம். 

தீமைகளில் இருந்து நாட்டைக் காப்பதும் கடமை  

தாய் நாட்டை வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை விட்டும் காப்பது எவ்வாறு முக்கியமோ அதைப் போலவே முக்கியமானது நாட்டுக்குள் நடக்கும் அக்கிரமங்களில் இருந்தும் அநியாயங்களில் இருந்தும் சமூகக் கொடுமைகளில் இருந்தும் நாட்டுமக்களைப் பாதுகாப்பது என்பது. அப்போதுதான் நாடு என்பது அமைதியான வாழுமிடமாக இருக்கும். ஆனால் நாடு இன்று மக்கள் வாழ்வதற்கே வெறுக்கத்தக்க இடமாக மாறிவரும் நிலையில் உள்ளதை நமது தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் (NCRB) அளிக்கும் தகவல்கள் எச்சரிக்கின்றன. 

இன்று நாளொன்றுக்கு 371 தற்கொலைகளும் 106 கற்பழிப்புகளும் 8136 பொதுவான குற்றங்களும் நம் நாட்டின் காவல் நிலையங்களில் பதிவாகின்றன. காவல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படாத குற்றங்கள் இவற்றைவிட ஐந்து மடங்கு அதிகம் என வேறு ஒரு கணக்கெடுப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. குற்றவிகிதங்கள் நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்தும் அனுபவித்தும் வருகிறோம். 
நாட்டைக் காப்பது நம் கடமை 

இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, தியானம், தானம், விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் ஆவன வேண்டும்.

இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)

www.quranmalar.com/2019/08/blog-post_14.html